கூகுள் நிறுவனம் நமக்குப் பயன்படக் கூடிய பல வசதிகளைத் தந்துள்ளது. தொடர்ந்து வழங்கியும் வருகிறது. டிஜிட்டல் உலகில் தன் ஆளுமையை நிலை நிறுத்த அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. அதே நேரத்தில், வேடிக்கை நிறைந்த சில விநோதங்களையும், விளையாட்டுகளையும், தன் தளத்தில் மறைத்து வைத்துள்ளது. இவை குறித்து எந்தவிதமான டாகுமெண்ட்களும் இல்லை. இருப்பினும் நாம் இவற்றைப் பெற்று மகிழலாம்.
கூகுள் தன் தளத்தில் பல விளையாட்டுகளையும் “ஈஸ்டர் எக்ஸ்” என்று சொல்லப்படுகிற ஆச்சரியம் தரத்தக்க திரைக் கூத்துகளையும் எப்போதும் தன் தளத்தில் மறைத்து வைத்திருக்கும். இவற்றில் சில நாம் ஏற்கனவே தெரிந்த விளையாட்டுகளாக இருக்கும். ஆனால், இந்த தளத்தில் கிடைக்கும் என அறியாமல் இருப்போம். அது போன்ற சில விளையாட்டுகளையும், “ஈஸ்டர் எக்ஸ்” விந்தைகளையும் இங்கு காணலாம்.
டி ரெக்ஸ் மினி கேம் (T-Rex Mini Game): நாம் இணையத்தில் இயங்கிக் கொண்டிருக்கையில், திடீரென இணைய இணைப்பு அறுந்து போகும். இதனால், நம் பணி பாதிக்கப்படும். எந்த வேலையும் இன்றி, கம்ப்யூட்டரின் திரையைப் பார்த்து அமர்ந்திருப்போம். இப்படிப்பட்ட வேளையில், நமக்கு “no network connectivity” என்ற தகவல் வரும்போது நமக்குக் கிடைக்கும் கேம் இது. தடைகளைத் தாண்டி, தாண்டி ஒருவரை ஓட வைக்கும் கேம் இது. இந்த விளையாட்டினை எப்படிப் பெற்று விளையாடுவது? இணைய இணைப்பு இல்லை என்று காட்டும் மேலே சொல்லப்பட்ட செய்தி வந்தவுடன், ஸ்பேஸ் பாரைத் தட்டவும். உடனே டி ரெக்ஸ் ஆள் ஓடத் தொடங்குவான். அவன் போகும் பாதையில் உள்ள தடைகளைத் தாண்டி அவனை ஓட வைப்பதே இந்த விளையாட்டு.
அடாரி பிரேக் அவுட் (Atari Breakout): இந்த விளையாட்டின் பெயரைச் சொன்னால் பலருக்கு இது நினைவிற்கு வராது. கீழாக நம் கட்டுப்பாட்டில், தட்டக்கூடிய, நகர்த்தக் கூடிய மட்டை இருக்கும். பந்து ஒன்று எந்த திசையில் வருகிறது என்று கணிக்க முடியாத அளவில் அங்கும் இங்கும் அலை பாயும். நாம் அந்த மட்டையைப் பயன்படுத்தி, பந்தில் தட்டினால், அது மேலே எழும்பிச் சென்று, மேலே அடுக்கப்பட்டுள்ள கட்டைகளை வீழ்த்த வேண்டும்.
பேக் மேன் கேம்: Pac-Man என்ற விளையாட்டு அனைவரும் அறிந்ததே. இதனைப் பல ஆண்டுகளாக நாம் கம்ப்யூட்டரிலும், ஸ்மார்ட் போனிலும் விளையாடி வந்திருக்கிறோம். கூகுள் இணையதளத்தில் 2010 ஆம் ஆண்டில், இது குறிப்பிட்ட காலத்தில், அதன் டூடில் எனப்படும் முகப்பு பக்கப் படமாகவும், கிளிக் செய்தால் விளையாடக் கூடியதாகவும் இருந்தது. தற்போது, அதன் தேடல் தளம் சென்று “google pacman”— என்று டைப் செய்தால் போதும். உடன், இந்த கேம் விளையாடக் கிடைக்கும்.
ஆண்ட்ராய்ட் பதிப்புகளுக்கான ஐகான்கள்: கடந்த ஐந்து ஆண்டுகளில் வெளியான ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் ஒவ்வொன்றும் தங்களுக்கான ஐகான்களையும் கொண்டுள்ளன. ஆனால் அவை மறைத்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றை கூகுள் மூலம் காணலாம். அது மட்டுமின்றி, புதியதாக வந்திருக்கும் ஆண்ட்ராய்ட் பதிப்பின் ஐகானையும் காணலாம். இந்த ஐகான்கள் குறித்து அறிந்து கொள்ள, முதலில் Settings மெனு சென்று, பின்னர், “About phone” என்பதை வீல் உருட்டிக் காணவும். பின்னர், இங்கு எந்த ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் ஐகான் அறிய வேண்டுமோ, அதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும்.
பிளாப்பி பேர்ட் (Flappy Bird): இந்த விளையாட்டு முதலில் வெளியானபோது, ஸ்மார்ட் போனில் எளிதாக விளையாடக் கூடிய விளையாட்டினை விரும்புவோருக்கு பிரியமானதாக இருந்தது. விளையாட எளிமையானதாக இருந்தாலும், பலர் இதனை வெற்றி பெற முடியாமல் கைவிட்டனர். வெற்றி பெற முடியாததால், வெற்றி பெறும் வழி தெரியாததால், பலர் தங்கள் ஸ்மார்ட் போனை தரையில் விட்டெறிந்த நிகழ்வுகளும் நடந்தேறின. இதனால், மக்கள் அதிகம் இதனை விரும்புகையில், இதனை வடிவமைத்தவர், இந்த விளையாட்டினை இணையத்தில் கிடைப்பதிலிருந்து நீக்கினார். ஆனால், மக்களின் விருப்பத்தினைப் பார்த்த, ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வடிவமைத்தவர்கள், மீண்டும் இந்த விளையாட்டினை உருவாக்கினார்கள். ஆனால், அதனை ஓர் ஈஸ்டர் எக் ஆக, விளையாட்டில் புதிய திருப்பங்களை அமைத்து உருவாக்கினார்கள். இந்த விளையாட்டினை ஸ்மார்ட் போனில் விளையாட, உங்கள் போனில் லாலிபாப் அல்லது மார்ஷ்மலாய் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இருக்க வேண்டும். மேலே சொன்ன வழிகளைப் பின்பற்றி, முதலில் உங்கள் போனில் உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான ஐகானில் சில முறை தட்டவும். பின்னர், அதில் தொடர்ந்து அழுத்தவும். உடன் இந்த விளையாட்டு விளையாடக் கிடைக்கும். எளிதாக வெற்றி பெறும் வகையில் இது தரப்பட்டுள்ளதால், மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கும்.
ஈஸ்டர் எக்ஸ்: கூகுள் தன் தேடல் தளத்தில் பல ஈஸ்டர் எக் புரோகிராம்களை ஒளித்து வைத்துள்ளது. இவை ஒவ்வொன்று குறித்து எழுதாமல், அவற்றின் பெயர், என்ன வகையான செயல்பாடு என இங்கே தருகிறேன்.
Do a Barreel Roll: கூகுள் தளமானது அப்படியே ஒரு பேரலில் போட்டு உருட்டப்படுவதனைக் காணலாம்.
Zerg Rush: கூகுள் தேடல் தளத்தில் உள்ள அனைத்து தேடல் பதிவுகளை நீக்கும்.
Askew; கூகுள் தளத்தினைச் சற்று ஆட்டிப் பார்க்கும்.
Flip a coin: உங்களிடம் சுண்டிப் பார்க்க, பூவா? தலையா? பார்க்க நாணயம் இல்லையா? தேடல் தளத்தில் இந்த Flip a Coin என்று டைப் செய்தால், உடன் இதற்கான தளம் கிடைக்கும். இதில் Animated என்ற டேப்பினைத் தேர்வு செய்தால், பல வகைகளில், நாணயம் ஒன்றைச் சுண்டிப் பார்க்க படங்கள் காட்டப்படும். சிலவற்றை நாம் அப்ளிகேஷன்களாகத் தரவிறக்கம் செய்து செயல்படுத்தலாம். சிலவற்றில் கிளிக் செய்தால், சுண்டி விடப்பட்டு விழும் நாணயத்தைப் பார்க்கலாம். பூவா? தலையா? என்று அறியலாம்.
Roll a Die: தாயக் கட்டம் விளையாட காய்கள் இல்லையா? கூகுள் தேடல் தளத்தில் இந்த கட்டளையைக் கொடுங்கள். முதலில் எத்தனை பக்கமுள்ள காய் இருக்க வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுத்து இந்த கட்டளையைக் கொடுங்கள். ஒவ்வொரு முறை தரும்போதும், காய் உருட்டப்பட்டு, உருட்டுபவருக்கான எண்கள் கிடைக்கும். இப்படியே இருவர் அல்லது அதற்கும் மேற்பட்டவர்கள் விளையாடலாம்.
Google Gravity: கூகுள் தேடல் தளத்தில் உள்ள அனைத்துமே சரிந்து விழுவதனைக் காணலாம். இந்த சொற்களைக் கொடுத்து கிடைக்கும் முடிவுகளில், முதல் தளத்தில் கிளிக் செய்திடவும். இல்லை எனில், www.googleloco.net என்ற தளம் செல்லவும். தளம் கிடைத்தவுடன், கூகுள் என்ற தலைப்பு சொல் உட்பட அனைத்து துண்டு துண்டுகளாகக் கீழே நொறுங்கி விழுவதைக் காணலாம். உங்களுக்கும் இதனுடன் விளையாட விருப்பம் எனில், உடைந்து விழுந்த துண்டுகளை, மவுஸின் கர்சரால், இழுத்து எறியலாம். அவை திசை தடுமாறி விழுவதனைக் காணலாம். கூகுள் மீது உள்ள கோபத்தை இப்படி தீர்த்துக் கொள்ளலாம்.
Google in 1998: கூகுள் தேடல் தளத்தின் முதல் சோதனை பதிப்பு எப்படி தரப்பட்டது என்பதனை அறியலாம். கூகுள் குழந்தை அன்று அழகாகத்தான் இருந்தது என உறுதி செய்து கொள்ளலாம்.
Anagram: இந்த சொல்லைத் தேடல் தளத்தில் கொடுத்தால், உடனே அதில் Do you mean “nag a ram” என்று வரும். Anagram என்ற சொல்லின் பொருள் ~ ஒரு சொல்லில் உள்ள எழுத்துகளைக் கொண்டு இன்னொரு சொல் அமைப்பது. எனவே, இங்கு கூகுள் நம்மிடம், நாம் கொடுக்கும் சொல்லின் பொருளை செயல்படுத்துவது போல ஒரு சொல் தொகுதியைத் தருகிறது. பொருள் விளங்க, இன்னொன்றையும்
தருகிறேன். Iceman என்ற சொல்லில் இருந்து, Cinema என்ற சொல்லை உருவாக்கலாம். இதுதான் anagram.
Recursion: பொதுவாக ஒரு சொல்லைத் தேடும் கட்டத்தில் கொடுத்தால், அதில் ஏதேனும் பிழை இருந்தால், அல்லது கூகுள் தன் தேடல் சொற்கள் தொகுப்பில் இல்லாத ஒரு சொல் என்றால், அந்த சொற்களில் உள்ள எழுத்துகள் சார்ந்த இன்னொரு சொல்லைக் கொடுத்து, “நீங்கள் இதையா தேடுகிறீர்கள்?” என்று கேட்கும். ஆனால், இந்தச் சொல்லைத் தேடும் கட்டத்தில் கொடுத்தால், மீண்டும் அதே சொல்லைக் கொடுத்து இதையா தேடுகிறீர்கள் என்று கேட்கும். ஏனென்றால், இந்தச் சொல் கோட்பாடு ஒன்றின் விளக்கத்தினையே அதன் செயலில் அமல்படுத்தும் இயக்கம் கொண்டதைக் குறிப்பதாகும்.
கூகுள் தரும் பலவிதமான பயனுள்ள சாதனங்களுக்கிடையே இது போல வேடிக்கை நிறைந்த செயல்பாடுகளும் உள்ளன. இவற்றை நாம் நேரம் கிடைக்கும்போது செயல்படுத்தி மகிழலாம்.