எந்த டிஜிட்டல் கேமராவாக இருந்தாலும், அது போனில் பதியப்பட்டு கிடைத்தாலும், அல்லது ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோனில் உள்ள கேமரா அப்ளிகேஷனாக இருந்தாலும், அதில் நாம் எடுக்கும் போட்டோக்கள் அனைத்தும் DCIM என்ற போல்டரிலேயே வைக்கப்படுகிறது. டி.சி.ஐ.எம். (DCIM) என்பது “Digital Camera Images” என்பதன் சுருக்கமாகும்.
இந்த டி.சி.ஐ.எம். போல்டர் என்பது ஒரு தகுதர (Standardization) வரையறை ஆகும். இந்த தர நிலை 2003 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. DCF (Design rule for Camera File system) என்ற கட்டமைப்பின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டது. JEITA, the Japan Electronics and Information Technology Industries Association என்ற அமைப்பு இதனை உருவாக்கியது. 2003ல் வகுக்கப்பட்ட தரம், பின்னர் 2010ல் புதுப்பிக்கப்பட்டது.
டிஜிட்டல் உலகில் பயன்படுத்தப்படும் வெவ்வேறு மீடியாக்களுக்கிடையே ஒன்றுக்கொன்று தகவல் பரிமாறிக் கொள்ள இந்த தரமுறை உதவுகிறது. எடுத்துக் காட்டாக, இந்த தரமுறைப் படி, இதில் தகவல் பரிமாறிக் கொள்ள நாம் பயன்படுத்தும் மைக்ரோ எஸ்.டி. கார்ட் FAT12, FAT16, FAT32 அல்லது exFAT என்ற வகையில் பார்மட் செய்யப்பட்டிருக்க வேண்டும். இதன் நோக்கம், டிஜிட்டல் கேமராக்களும், மெமரி கார்ட்களும் ஒன்றை ஒன்று புரிந்து கொண்டு இயங்க வேண்டும் என்பதே.
டி.சி.எம். டைரக்டரியும் போல்டர்களும்: DCF கட்டமைப்பின் முதல் இலக்கு, டிஜிட்டல் போட்டோக்கள் அனைத்தும் “DCIM” டைரக்டரியில் சேவ் செய்யப்பட வேண்டும் என்பதே. இந்த டைரக்டரியில், துணை டைரக்டரிகளும் அமைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொன்றிற்கும் 100 முதல் 999 வரை குறியீடு எண் வழங்கப்படும். இந்த எண்ணுடன் எழுத்துகளும் எண்களுமாக ஐந்து குறியீடுகள் இணைக்கப்படும். ஒவ்வொரு கேமரா தயாரிப்பு நிறுவனமும், தனக்கென ஒரு குறியீடு அமைப்பினை எடுத்துக் கொள்ளலாம். எடுத்துக் காட்டாக, அதிர்ஷ்டவசமாக ஆப்பிள் தன் பெயர் அடங்கிய குறியீட்டினை அமைத்துக் கொண்டது. அதன் டைரக்டரியில் உள்ள போல்டர்கள் “100APPLE,” “101APPLE,” என்ற வகையில் செல்லும். இந்த ஒவ்வொரு சப் டைரக்டரியிலும், இமேஜ் எனப்படும் போட்டோக்கள் பைல் செய்யப் படும். இந்தக் குறியீடுகளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லை. நாம் எடுக்கும் போட்டோக்கள், நாம் எடுக்கும் வரிசையிலேயே சேவ் செய்து அமைக்கப்படும். எடுத்துக் காட்டாக, நாம் எடுக்கும் போட்டோக்கள் DSC_0001.jpg, DSC_0002.jpg என்ற வரிசையில் அமைவதனைக் கண்டிருப்பீர்கள்.
இதே போல்டரில், .THM பைல்களும் அமைந்திருப்பதனைக் காணலாம். இவை JPG படங்களுடன் கூடுதலாக அமையும். எடுத்துக் காட்டாக, உங்கள் டிஜிட்டல் கேமராவினைப் பயன்படுத்தி, வீடியோ ஒன்று எடுக்கிறீர்கள். இது .MP4 பைலாக சேவ் செய்யப்படும்.
இப்போது, DSC_0001.MP4 file மற்றும் DSC_0001.THM என இரு பைல்கள் சேவ் செய்யப்பட்டிருப்பதனைக் காணலாம். இதில் .MP4 என்பது அந்த வீடியோ பைலாகும். .THM பைலில், சிறிய அளவிலான வீடியோ காட்சிக்கான ஒரு படமும், அது குறித்த தகவல்களும் அடங்கியிருக்கும். இந்த பைல், தான் சார்ந்த வீடியோ குறித்த தகவல்களைக் காட்டும். அதாவது வீடியோவினை லோட் செய்திடாமலேயே காட்டப்படும்.
ஏன் எல்லாரும் DCF தரமுறையைப் பின்பற்றுகின்றனர்?DCF தரமுறை மாறா நிலையில் (“de facto”) அனைத்து டிஜிட்டல் கேமரா நிறுவனங்களாலும், ஸ்மார்ட் போன் வடிவமைப்பவர்களாலும், பின்பற்றப்படும் ஒரு தர முறையாக உள்ளது. tஎனவே, DCIM வடிவமைப்பு என்பதனை, டிஜிட்டல் கேமராவிற்கான படங்கள் மாற்றும் அப்ளிகேஷன் சாப்ட்வேர், தானாகவே, ஒரு டிஜிட்டல் கேமரா அல்லது மைக்ரோ எஸ்.டி. கார்ட் கம்ப்யூட்டர் மற்றும் பிற சாதனங்களுடன் இணைக்கப்படுகையில், அவற்றில் உள்ள போட்டோக்களைப் புரிந்து கொண்டு, அவற்றை மாற்றுவதற்குத் தயாராகிறது.
ஸ்மார்ட் போன்களில் உள்ள டி.சி.ஐ.எம். போல்டர்களும் இதே நோக்கத்தினையும் செயல்பாட்டினையும் மேற்கொள்கின்றனர். நீங்கள் ஓர் ஐபோன் அல்லது ஆண்ட்ராய்ட் போனை, உங்கள் கம்ப்யூட்டருடன் இணைக்கையில், அந்த கம்ப்யூட்டர் அல்லது போட்டோ லைப்ரரி சாப்ட்வேர், டி.சி.ஐ.எம். போல்டரைக் கண்டு கொள்கிறது. அவற்றில் தன் சாதனத்திற்கு மாற்றப்படக் கூடிய போட்டோக்கள் இருப்பதனைக் கண்டுக் கொள்கின்றன. அவற்றை மாற்றிக் கொள்ளவும் தயாராக இருப்பதனை அறிவிக்கின்றன.
ஏன் டி.சி.ஐ.எம். என அமைக்க வேண்டும். இது பலருக்குப் புரியவில்லையே? “Photos” என்றே இதற்குப் பெயரிட்டிருக்கலாமே? என்ற கேள்விகள் நம் மனதில் தோன்றலாம். அல்லது “Pictures”/ Videos” என்று பெயரிட்டிருக்கலாமே என்று எண்ணலாம். இப்படி ஒவ்வொரு நிறுவனமும் ஒரு பெயரை வைத்துக் கொண்டால், அதனைக் கண்டறியப் பயன்படுத்தப்படும், சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள் இயங்க முடியாமல் போய்விடும். மேலும் ஒவ்வொரு கேமராவும் ஒரு முறையில் தங்களுடைய வடிவமைப்பை அமைத்துக் கொண்டால், மைக்ரோ எஸ்.டி. கார்ட்களை, கேமராக்களுக்கிடையே மாற்றி மாற்றி எளிதாகப் பயன்படுத்த முடியாது. ஒவ்வொரு கேமராவிற்கும், அதற்கேற்றபடி பார்மட் செய்திட வேண்டியதிருக்கும். எனவே, இந்த தரமுறை வகுக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது. எப்படி இருந்தாலும், டிஜிட்டல் சாதனங்கள் இடையே, ஒரு தரமுறை இருந்தால் தான், அனைத்தும் சீராக, எளிதாக இயங்க முடியும்.