எச்1-பி விசாவில் அப்படி என்னதான் பிரச்சனை.. இந்திய ஐடி நிறுவனங்களை டிரம்ப் குறிவைக்க என்ன காரணம்..?
அமெரிக்க ஐடி நிறுவனங்களுக்கு ஊழியர்களை அனுப்பும் மற்றும் அவர்களுடைய பணியை இங்கிருந்தே செய்யும் இந்தியாவின் முக்கிய ஐடி நிறுவனங்களான இன்போசிஸ், விப்ரோ, டிசிஎஸ் போன்ற நிறுவனங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
புதிய சீர்திருத்த மசோதாவின் படி எச்1பி விசா மூலம் அமெரிக்காவுக்குப் பணிபுரிய வருபவர்களுக்குக் குறைந்தது $130,000 சம்பளம் இருக்க வேண்டும் என்று திருத்தப்பட்டுள்ளது. இதனால் இந்தியர்கள் உள்பட வெளிநாட்டவர்களுக்கு இனி அமெரிக்காவில் வேலைக் கிடைப்பது மிகவும் அரிதான விஷயமாகிறது.
இந்த மசோதா திங்கட்கிழமை அமெரிக்கப் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது என்ற கிடைத்த தகவலால் இந்திய பங்குச்சந்தையின் ஐடி நிறுவனங்களின் பங்குகள் கடுமையாகச் சரிந்தன. முக்கிய ஐந்து ஐடி நிறுவனங்கள் திங்கட்கிழமை ஒரே நாளில் ரூ.50,000 கோடி அளவுக்குப் பங்கு வர்த்தகத்தின் மதிப்பை இழந்தன. வெகுவிரைவில் இந்த மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட உள்ளதால் இந்தியர்களின் அமெரிக்கக் கனவு, கனவாகவே மாறும் அபாயம் உள்ளது.
இந்நிலையில் இதுகுறித்த முழு விபரங்களைத் தற்போது பார்ப்போம்.
அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களின் இந்த "குடியேற்றச் சீர்திருத்த முயற்சி' எச்1பி பெற்று வேலைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு ஒரு கடுமையான சோதனை ஆகும். 90 நாட்களில் இந்த மசோதாவின் அதிபர் கையெழுத்திட வேண்டும் என்றாலும் அவர் இந்த வாரமே கையெழுத்திட முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
எனவே இனிமேல் வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவுக்குப் பணி நிமித்தம் வரும் ஊழியர்கள் இந்தப் புதிய திருத்தங்களுக்கு ஏற்ப பணிபுரிய வேண்டிய நிலை உள்ளது. இந்த நடவடிக்கை அமெரிக்காவின் நலனுக்கு உகந்ததாக இல்லை என்றே கூறப்படுகிறது.
அதிபர் டிரம்ப் அவர்களின் இந்தப் புதிய நடவடிக்கையால் அமெரிக்க ஐடி நிறுவனங்கள் இனிமேல் அமெரிக்கர்களை மட்டுமே பணியில் அமர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதிகமான அனுபவம் மற்றும் திறமையாளர்களை மட்டுமே வெளிநாட்டில் இருந்து அதிகச் சம்பளம் கொடுத்து வரவழைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த "குடியேற்றச் சீர்திருத்த முயற்சி நடவடிக்கை முழுக்க முழுக்க அமெரிக்கர்களை நலனுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டில் இருந்து வேலைக்கு வந்து அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகளைக் குறைக்கும் நடவடிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கும், அமெரிக்கப் பிரஜைகளின் நலனில் அக்கறை கொண்டும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது.
அதே நேரத்தில் எச்1பி விசா பெற்று விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் கணினி புரோகிராமர்கள் என வெளிநாட்டவர்கள் அதிகச் சம்பளத்திற்கு வேலைக்கு எடுத்துக் கொள்ளும். அவர்கடைய திறமைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
அமெரிக்காவில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தின் 60 சதவீத ஊழியர்கள் எச்1பி விசா பெற்றுப் பணிபுரிபவர்கள் என்பதால் இவர்கள் தற்போது பணியில் நீட்டிக்க வேண்டும் என்றாலும், புதிய ஊழியர்களைப் பணியில் அமர்த்த வேண்டும் என்றாலும் தங்களது லாபத்தில் பெரும் பங்கை இதற்காக இந்நிறுவனம் இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தம்பதிகளாக எச்1பி விசா பெற்று பணிபுரியும் நடைமுறை இனி நீடிக்க வாய்ப்பே இல்லை.
எச்1பி விசா மூலம் தற்போது அமெரிக்க நிறுவனங்கள் குறைந்த சம்பளத்தில் திறமை உள்ளவர்களைப் பணியில் அமர்த்தியுள்ளது. ஆனால் இனிமேல் அதிகச் சம்பளத்தில் குறைந்த திறமையுள்ள உள்ளூர் ஊழியர்களைப் பணி அமர்த்தும் நிலை ஏற்பட்டுள்ளதால் பணியும் தரம் குறைவதோடு திறமை குறைந்தவர்களின் பணிக்கும் ஆபத்தும் ஏற்படும். இதனால் நிறுவனங்களின் ஸ்திரத்தன்மை குறையும்.
பெரும்பான்மையான அமெரிக்க நிறுவனங்கள் அமெரிக்கர்களை வேலைக்கு எடுக்காமல் அவுட்சோர்ஸ் மூலமும், எச்1பி விசா மூலம் வேலைக்கு ஆட்களை எடுப்பதால் அமெரிக்க இளைஞர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகியுள்ளதாக டிரம்ப் அரசின் நிர்வாகிகள் கருத்து கூறியுள்ளனர்.
மேலும் அவுட்சோர்சிங் நிறுவனங்கள் அடைந்து வந்த அபரீதமான லாபங்களுக்கும் இதனால் தடை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பணிபுரியும் H-1B விசா பணியாளர்கள் அமெரிக்கர்களுக்குப் பணியைச் சொல்லிக் கொடுக்கும் டிரைனர்களாக மட்டுமே அதிகம் இருக்க வாய்ப்பு உள்ளது என்றும் டிரைனிங் முடிந்ததும் அவர்கள் கழட்டி விடப்படுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.